பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. கடைசியாக 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்ட் டெஸ்ட்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அதற்கு பிறகு இந்திய அணி ஆடியிருக்கும் மிக மோசமான இன்னிங்ஸ் இதுதான். தொடர் வெற்றிகளால் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி இந்த இன்னிங்ஸில் எங்கேயெல்லாம் சொதப்பியது?
டாஸ் :
டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் வென்றிருந்தார். பெங்களூர் பிட்ச் எப்போதுமே பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சாகத்தான் இருக்கும் என்ற மனநிலையில் முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இதுவே மோசமான முடிவாக மாறிப்போனது. நேற்று முழுவதும் மழை பெய்திருந்ததாலும் இன்றும் இடையிடையே மழை பெய்ததாலும் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருந்தது. பந்து நன்றாக மூவ் ஆனது. சவுதி, ஹென்றி, ரூர்கி என மூவருமே பந்தை உள்ளும் வெளியுமாக திருப்பி விளையாடினர். கிட்டத்தட்ட அவர்களின் சொந்த நாட்டில் முதல் செஷனில் பந்து வீசினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது அவர்களின் பெர்ஃபார்மென்ஸ்.
பிட்ச்சின் இப்படியொரு தன்மையை இந்திய வீரர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப தகவமைத்து ஆட இந்திய வீரர்கள் தயாராகவும் இல்லை. இதுதான் இந்திய அணியின் முதல் பிரச்சனையாக இருந்தது.
அணித்தேர்வு மற்றும் பேட்டிங் ஆர்டர் குழப்பம்;
இந்திய அணியின் லெவனில் மூன்று ஸ்பின்னர்களை எடுத்திருந்தார்கள். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் கூட அஷ்வினையும் ஜடேஜாவையும் மட்டும்தான் பயன்படுத்தியிருந்தார்கள். இத்தனைக்கும் ஒரு போட்டி சேப்பாக்கத்தில் வேறு நடந்திருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என மூன்று ஸ்பின்னர்களை லெவனில் எடுத்திருந்தார்கள். களம் வேறாக இருந்தது. பிட்ச் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. நியூசிலாந்து அணி ஒரே ஒரு முழுநேர ஸ்பின்னருடன்தான் களமிறங்கியது. அவருக்கும் ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக கடுமையாக தடுமாறியிருந்தது. அதனால் மூன்று ஸ்பின்னர்களை எடுத்திருக்கக்கூடும். ஆனால்,, அந்த முடிவு இந்தியாவுக்கு கூடுதல் சவாலைத்தான் கொடுத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டரிலும் குழப்பம் இருந்தது. நம்பர் 3 இல் ஆடும் கில்லை பென்ச்சில் வைத்துவிட்டு அவருக்கு பதில் சர்ப்ராஸ் கானை லெவனில் எடுத்திருந்தார்கள். இதனால் பேட்டிங் ஆர்டரிலும் மாற்றம் இருந்தது. நம்பர் 4 இல் இறங்கும் விராட் கோலி நம்பர் 3 இல் இறங்கியிருந்தார். எந்த பலனுமில்லை. கோலியே டக் அவுட்தான் ஆகியிருந்தார். சர்ப்ராஸ் கானும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரும் டக் அவுட்தான் ஆகியிருந்தார். கே.எல்.ராகுலை நம்பர் 3 இல் இறக்கியிருக்கலாம் என வர்ணனையாளர்கள் ஒரு விமர்சனத்தை முன் வைத்திருந்தனர். ஆனால், நம்பர் 6 இல் வந்த ராகுலும் டக் அவுட்தான் ஆகியிருந்தார். மொத்தமாக 5 பேட்டர்கள் டக் அவுட் ஆகியிருந்தனர். ஜெய்ஸ்வால், பண்ட்டுக்கு அடுத்து அதிக பந்துகளை எதிர்கொண்டிருந்தது குல்தீப் யாதவ்தான். 17 பந்துகளை அவர் எதிர்கொண்டிருந்தார். சிராஜூம் குல்தீபும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 6 ரன்களை சேர்த்திருந்தனர். மூன்றாவது அதிக பார்ட்னர்ஷிப் இதுதான்.சர்ப்ராஸ், ரிஷப் பண்ட், ஜடேஜா என பல பேட்டர்களும் இப்படித்தான் சூழலையே உணர்ந்துகொள்ளாமல் இஷ்டத்துக்கு ஆடி அவுட் ஆகினர். கம்பீர் பேசும் ‘adaptability’ என்கிற அணுகுமுறைக்கு நேரெதிரான அணுகுமுறை இது. அதற்கு பரிசாகத்தான் 46 க்கு ஆல் அவுட் என்பது வாய்த்திருக்கிறது.