மேற்கு வங்காளத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் பெருந்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது குழந்தையுடன் ஈரோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்த இளம்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.
உடனே அவர்கள் மருந்துவமனைக்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் என கூறி அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர். காரில் ஏறிய அந்த பெண்ணிடம் எங்களுக்கு நிறைய பெரிய மனிதர்களை தெரியும். அவர்களுடன் நீ சந்தோசமாக இருந்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். உடனே அந்த இளம்பெண் தப்பித்து செல்ல முயன்றார். அப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தகராறு
செய்துள்ளனர் .
இளம்பெண் கூச்சல் போட்டதில் அவர்கள் காரில் இருந்து தப்பி ஓடினர்.பின்னர் இதுகுறித்து அந்த பெண் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறையில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது காரில் வேகமாக சென்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் சித்தோடு பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பதும், பெருந்துறை அடுத்த ஜீவா செட் பகுதியை சேர்ந்த செல்லமுத்து (46) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும்தான் இளம்பெண்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது என தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்போது ,இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.