சென்னை: ‘கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை தாக்கம், இனி மாநில பேரிடராகக் கருதப்படும். வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில், முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நகரங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலை வீச்சும் காணப்பட்டது.
இதில், பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் பந்தல் திறப்பு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்தது; திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
தனிப்பிரிவு
வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. எனவே, வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு, பேரிடர் நிதியில் இருந்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, வெப்ப அலை வீச்சு மாநில பேரிடராக அறிவிக்கப்படும் என்று, சட்டசபையில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில், சென்னை, கோவை, கடலுார், தர்மபுரி, ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சை, திருப்பத்துார், திருச்சி, வேலுார், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது.
இதில், பாதிப்பு தடுப்புக்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், உரிய நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரூ.4 லட்சம்
இதை கருத்தில் வைத்து, வெப்ப அலை வீச்சு மாநில அளவிலான பேரிடராகக் கருதப்படும். இதில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
மருத்துவ உதவி, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கான தொகை, பேரிடர் நிதியில் இருந்து பெறப்படும். இதற்கான அறிவிப்பை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.