வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் காப்பகத்தில், சிறுவன் அடித்து காயப்படுத்தியதாக பாஜக வை சேர்ந்த பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் சிவன் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா(33). வழக்கறிஞர். இவரது மகன் தருண் சாய். சரியாகப் பேச முடியாத தனது மகனை, பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக, வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதலாவது தெருவில் உள்ள ஒரு தனியார் காப்பத்தில் விடுவது வழக்கம்.
இந்த காப்பகத்தை, வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த மீனாட்சி (42) என்பவர் நடத்தி வருகிறார். இவர், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் சரண்யா புகார் மனு அளித்திருந்தார்.

அதில், தனியார் காப்பகத்தில் தனது மகன் தருண் சாய் தாக்கப்பட்டு, அடித்து சித்திரவதை செய்யபட்டதாகவும், இது குறித்து கேட்டபோது காப்பக நிர்வாகி மீனாட்சி தன்மை மிரட்டியதாகவும் தெரிவித்தார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். இதில், மீனாட்சி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், மீனாட்சியைக் கைது செய்தனர் சிறையில் அடைத்தனர்.