சென்னை:
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
சென்னை வேளச்சேரியில் குருநானக் கல்லூரி (தன்னாட்சி) இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் இன்று காலை திடீரென கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கையில், கல்லூரி கட்டணத்தை குறைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், மாணவர் கல்லூரி வருகை பதிவேட்டில் 75 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் அதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 ஆயிரம் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றும், விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகை விடக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தலைமை நிர்வாகி (எச்.ஓ.டி.), கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக வேளச்சேரி பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.