மார்ச் 18 முதல் 22, 2024 வரை புதுதில்லியில் நடைபெறும் பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் (ஐபிஎச்இ) 41வது வழிநடத்தல் குழு கூட்டம், மார்ச் 20, 2024 அன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் அதன் முறையான நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
ஆஸ்திரியா, சிலி, பிரான்ஸ், ஐரோப்பிய ஆணையம், ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, முக்கிய கொள்கை முன்னேற்றங்கள் மற்றும் ஹைட்ரஜன் குறித்து தங்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளால் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கினர். ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள், தேவை உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, அளவில் வழங்கல், பணியாளர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நிலை போன்ற
தேசிய தூய்மையான ஹைட்ரஜன் உத்திகளை பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
ஹைட்ரஜனின் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் சேமிப்புக்கான வணிக மாதிரிகள், வலுவான ஹைட்ரஜன் பொருளாதாரத்தை உருவாக்க நிதி, கொள்கை, ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து குழு விவாதித்தது.
ஒழுங்குமுறை கட்டமைப்பு, உமிழ்வு சேமிப்பைக் கண்டறிவதற்கான முறைகள், ஹைட்ரஜன் உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகளை உருவாக்குதல், ஹைட்ரஜன் வங்கிகள், ஏற்றுமதி-இறக்குமதி வழித்தடங்கள் ஆகியவை குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்தனர். பொது விழிப்புணர்வு, எளிதாக வர்த்தகம் செய்தல், அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செலவு அணுகுமுறைகள் ஆகியவையும் விவாதங்களில் இடம் பெற்றன.
40 வது வழிநடத்தல் குழுவின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளையும் குழு மதிப்பாய்வு செய்தது. உலகின் தெற்கில் உள்ள நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்தின் பரந்த பங்களிப்பை உறுதிப்படுத்த உறுப்பினர் தகுதியை ஊக்குவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இந்த ஆண்டு நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஹைட்ரஜன் வாரத்தின் போது ஐரோப்பிய ஆணையம் 42 வது வழிநடத்தல் குழுவை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.
பொருளாதாரத்தின் சாத்தியமான அனைத்து துறைகளிலும் பசுமை ஹைட்ரஜனை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்துவதை விரைவுபடுத்த தைரியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்தினார்.